Sunday, April 23, 2017

தினம் ஒரு பாசுரம் - 82

தினம் ஒரு பாசுரம் - 82

பொய்யைச் சுரக்கும் பொருளைத் துரந்து இந்தப் பூதலத்தே
மெய்யைப் புரக்கும் இராமாநுசன் நிற்க வேறு நம்மை
உய்யக் கொள்ள வல்ல தெய்வம் இங்கு யாது என்று உலர்ந்து அவமே
ஐயப்படா நிற்பர் வையத்துள்ளோர் நல் அறிவு இழந்தே


--- ராமானுச நூற்றந்தாதி (திருவரங்கத்து அமுதனார்)

 
அமுதனாரின் பாசுரங்களில் ஆச்சார்ய பக்தியும், சரணாகதியும் அற்புதமாகப் புலப்படும் ஒன்று என்பதோடு, மணிப்பிரவாள நடை பெருகியிருந்த கால கட்டத்தில் அவர் அருளிய இப்பிரபந்தத்தின் செழுந்தமிழ் நம்மை பெரு வியப்பில் ஆழ்த்தும். கலிப்பாவில் கலித்தாழிசை, கலித்துறை, கலி விருத்தம் ஆகிய பெரு வகைகள் உண்டு. மிகுதியான ஆழ்வார் பாசுரங்கள், சீவக சிந்தாமணி, கம்பராமாயணம் ஆகியவை கலித்துறையைச் சார்ந்தவை. கலித்துறையின் ஒரு வகையான #கட்டளைக்கலித்துறை என்ற கடினமான இலக்கணம் கொண்ட பா வகையில் எழுதப்பட்டவை ராமானுச நூற்றந்தாதிப் பாசுரங்கள் (கட்டளை= எழுத்தின் அளவு)

வைணவத்தால் தமிழும், அருந்தமிழால் வைணவமும் செழித்து ஓங்கின என்றால் அது மிகையாகாது. குருபரம்பரை ஆச்சார்யர்கள் தொடங்கி, தமிழ்ச் சான்றோர்கள், சாமானிய அடியார்கள் வரை என ஆழ்வார் பிரபந்தங்களுக்கு அன்னார் இயற்றிய உரைகள் எண்ணிலடங்காதவை. அது மட்டுமன்றி, வைணவ தத்துவம், கோட்பாடுகளால் ஈர்க்கப்பட்ட மேலை நாட்டு அறிஞர்கள் பலர், அமெரிக்கப் பல்கலைகளில், ஆழ்வார்களின் அருளிச்செயலான நாலாயிரப் பிரபந்தங்கள், குறிப்பாக, நம்மாழ்வாரின் திருவாய்மொழி, திருவிருத்தம் மற்றும் பின்னாள் குருபரம்பரை ஆச்சார்யர்கள் இயற்றிய அருளிச்செயலுக்கான ஈடுகள் (ஆறாயிரப்படி தொடங்கி முப்பத்தாறாயிரப்படி வரை பல) மீதான ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.

பாசுரப்பொருள்:

பொய்யைச் சுரக்கும் பொருளைத் துரந்து - பொய்மையான விஷயங்களை (உண்மை போல்) முன்னிறுத்தும் தத்துவங்கள் அகலும்படியாக

இந்தப் பூதலத்தே - இப் பூவுலகில்

மெய்யைப் புரக்கும் இராமாநுசன் நிற்க  - சத்தியமான விஷயங்களை (அடியவர்க்கு) வழங்கிக் காத்தருள ராமானுஜர் எழுந்தருளியிருக்க

வேறு நம்மை உய்யக் கொள்ள வல்ல தெய்வம் - (அவரை விடுத்து) நம்மை தடுத்தாட்கொள்ளும் சக்தியும், கருணையும் கொண்ட வேறொரு இறைத்தூதர்

இங்கு யாது என்று - இந்த உலகில் யாராவது உள்ளனரோ என

உலர்ந்து அவமே -  வேதனையில் உடல் வாடி, பயனற்ற வகையில்

ஐயப்படா நிற்பர் - சந்தேகப்பட்ட வண்ணம் இருப்பர்

வையத்துள்ளோர் நல் அறிவு இழந்தே - இப்பூவுலக மாந்தர், (உடையவர் திருவடிகளே நமக்குக் கதி என்ற) நல்லறிவைத் தொலைத்து விட்டு!


The Tamil Veda - Pillan's Interpretation of the Tiruvaymoli (John Carman and Vasudha Narayanan) என்ற நூல், திருக்குருகைப் பிள்ளானின் (திருவாய்மொழி உரையான) ஆறாயிரப்படியை ஆய்ந்து எழுதப்பட்டது. A Hundred Measures of Time: Tiruviruttam (Archana Venkatesan) என்பது, நம்மாழ்வாரின் திருவிருத்தப் பாசுரங்களின் கவிதை நடை ஆங்கில மொழிபெயர்ப்பையும், விளக்கங்களையும் உள்ளடக்கிய ஒரு புத்தகம். பராங்குச நாயகி பாவத்தில் நம்மாழ்வாரின் திருவிருத்தப் பாசுரங்களில் காணப்படும் (கண்ணன் மீதான) பெருங்காதலை, நாச்சியார் திருமொழியில் காணக்கிடைக்கும் ஆண்டாளின் தீராத மையலோடு ஒப்பிடலாம். திருவிருத்தப் பாசுரம் ஒன்று பார்ப்போம்.

தளர்ந்தும் முறிந்தும் வரு திரைப் பாயல் திரு நெடுங் கண்
வளர்ந்தும் அறிவுற்றும் வையம் விழுங்கியும் மால் வரையைக்
கிளர்ந்து மறிதர கீண்டு எடுத்தான் முடி சூடு துழாய்
அளைந்து உண் சிறு பசுந் தென்றல் அந்தோ வந்து உலாகின்றதே


His long eyes closed, He slumbers
        upon His bed that rests
        on rolling rising ocean waves.
        When He comes awake
        He swallows worlds

        a fresh gentle breeze wafts
        having devoured the fragrance of tulasī
        adorning the crown of that same One
        who uprooted the great mountain
        turned it on its head.


பொருள் கொள்வதற்கு, சொற்றொடர்களை இடம் மாற்ற வேண்டும்.

தளர்ந்தும் முறிந்தும் வரு திரைப் பாயல் - upon his bed that rests
on rolling rising ocean waves

திரு நெடுங் கண் வளர்ந்தும் - His long eyes closed, he slumbers
அறிவுற்றும் வையம் விழுங்கியும் - When he comes awake
he swallows worlds

மால் வரையைக் கிளர்ந்து மறிதர கீண்டு எடுத்தான் - who uprooted the great mountain turned it on its head
முடி சூடு துழாய் அளைந்து உண் - having devoured the fragrance of tulasī
adorning the crown of that same one

சிறு பசுந் தென்றல் அந்தோ வந்து உலாகின்றதே - a fresh gentle breeze wafts

பாசுரச்சிறப்பு:

பொய்யைச் சுரக்கும் பொருளைத் துரந்து:
பொய்யைச் சுரக்கும் விஷயங்களை, உய்வுக்கு வழி காட்ட இயலாத் தத்துவங்கள் என்பது நேரடிப்பொருள்.  இராமனுஜர் திருவடி சரண் புகுதலின் விளைவாக, ஐம்புலன் சார் சிற்றின்பங்கள் மீது பற்று, தீது/பொறாமை/வஞ்சம்/அகந்தை மிகுந்திருத்தல், பக்தி/கர்ம/ஞான வழிகள் குறித்த தெளிவின்மை, ஓர் ஆச்சார்யன் துணையோடு கைக்கொள்ளும் சரணாகதித்துவமே உய்ய வழி என்ற புரிதலின்மை ஆகிய பொய்மைகள் நம்மை விட்டு நீங்குவதாக அமுதனார் அற்புதமாக அருளுகிறார் என்று கொள்ளுவதும் தகும்!

மெய்யைப் புரக்கும் இராமானுசன் - இங்கு மெய் என்றால் சத்தியம் = பிரம்மம் என்றும் கொள்ளலாம். அதாவது, இராமனுஜர் (ஒருவரே) அடியவர்க்கு பரம்பொருள் தத்துவத்தையும், பரமபதம் என்ற பேரின்பத்தையும் அருள வல்லவர் என்று அர்த்தமாகின்றது

”அவம்” என்றாலே எதிர்மறையான பொருள் தான். அவச்சொல், அவமானம், அவநம்பிக்கை, அவமரியாதை, அவலட்சணம்... ஆக, “அவமே ஐயப்படா நிற்பர், வையத்துள்ளோர்” எனும்போது, தங்கள் சந்தேகத்தால், உலக மாந்தர், கேடு, இன்னல் தரும் பலவற்றைக் கடந்து வரவேண்டி இருப்பதைக் குறிப்பில் உணர்த்துவதாகக் கொள்ளலாம்.

---எ.அ.பாலா

நன்றி நண்பரே !

வருகை தந்தமைக்கு நன்றி! உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!
Related Posts with Thumbnails